பழனி அருகே பரிதாபம்: 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த காட்டு யானை, குட்டியுடன் பலி
பழனி அருகே வனப்பகுதியில், 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தாய் யானையும், குட்டி யானையும் பரிதாபமாக இறந்தன. இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பழனி,
பழனி வனப்பகுதியில் உள்ள பி.வி.வேலிகாப்புக்காடு, பாலாறு அணை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது காட்டுக்கொட்டான் ஓடை பகுதியில் குட்டியுடன், காட்டுயானை இறந்து கிடப்பதை பார்த்தனர். உடனே பழனி வனச்சரகர் கணேஷ்ராமுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வனச்சரகர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது தாயுடன் ஆண் குட்டியானை இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் அந்த யானைகளின் உடல் களை அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்தனர். அதையடுத்து அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் மருதபாண்டி, முத்துச்சாமி மற்றும் குழுவினர் யானைகளின் உடல்களை பரிசோதனை செய்தனர். அதன்பிறகு யானைகளின் உடல்கள் புதைக்கப்படாமல் வனவிலங்குகளின் உணவுக்காக அந்த இடத்திலேயே விடப்பட்டன.
இதுகுறித்து பழனி வனச்சரகர் கணேஷ்ராம் கூறியதாவது:-
இறந்து போன ஆண் குட்டியானை தாயுடன் காட்டுக்கொட்டான் ஓடைப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க வந்திருக்கலாம். அப்போது பாறையில் இருந்து 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததில் 2 யானைகளும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம். மருத்துவ பரிசோதனையில் 2 யானைகளும் பாறையில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளதாக தான் தெரியவந்துள்ளது. யானைகள் இயற்கையான முறையில் இறந்துள்ளதால் அவை மற்ற விலங்குகளுக்கு உணவாக பயன்படும் வகையில் புதைக்காமல் அங்கேயே விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாறையில் இருந்து தவறி விழுந்து குட்டியுடன் காட்டுயானை இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.