காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு போலீசார் விசாரணை

வந்தவாசி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-10-25 22:30 GMT
வந்தவாசி தாலுகா சாலவேடு கிராமத்தை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 25), சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரும் சென்னை மணலியை சேர்ந்த மோனிஷா (20) என்பவரும் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தி ற்கு பின் மோனிஷா சாலவேடு கிராமத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோனிஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதைத்தொடர்ந்து கடந்த வாரம் சாலவேடு கிராமத்திற்கு வந்தார்.

அப்போது மீண்டும் காய்ச்சல் வந்ததால் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மோனிஷா நேற்று முன்தினம் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சாலவேடு கிராமத்திற்கு வந்த மோனிஷாவின் பெற்றோர் கதறி அழுதனர்.

மேலும் மோனிஷாவின் தந்தை மதுசூதனன் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்