தனிக்குடித்தனம் செல்வதில் பிரச்சினை: போதகர் தீக்குளித்து தற்கொலை - காப்பாற்ற முயன்ற மனைவியும் பலியான பரிதாபம்

தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போதகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-24 23:41 GMT
அவினாசி,

அவினாசி அருகே தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போதகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் டேனியல். இவருடைய மகன் ரிச்சர்டு பிராங்ளின் (வயது 30). இவர் அதே பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில் போதகராக இருந்து வந்தார். இவருக்கும் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் அருகே உள்ள தாரம்பாளையத்தை சேர்ந்த பிரபாகர்தாஸ் என்பவருடைய மகள் ஆசிய ஜெர்சிக்கும் (28) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பிரசவத்திற்காக ஆசிய ஜெர்சி தாரம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆசிய ஜெர்சிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை ரிச்சர்டு பிராங்ளின் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க சேலத்தில் இருந்து தாரம்பாளையம் வந்தார்.

பின்னர் அங்கு சென்று மனைவியிடம் குடும்ப பிரச்சினை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆசிய ஜெர்சி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு ரிச்சர்டு பிராங்ளின் தற்போது தனிக்குடித்தனம் போக வேண்டாம், கூட்டுக்குடும்பமாக இருப்போம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபம் அடைந்த ரிச்சர்டு பிராங்ளின் வீட்டை விட்டு வெளியே சென்றார். சிறிதுநேரத்திற்கு பிறகு பெட்ரோல் கேனுடன் ரிச்சர்டு பிராங்ளின் அங்கு வந்தார். பின்னர் வீட்டின் முற்றத்தில் நின்றவாறு உடலில் பெட்ரோலை ஊற்றினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிய ஜெர்சி பெட்ரோல் கேனை அவரிடம் இருந்து பிடுங்க முயன்றார். அப்போது அவர் மீதும் பெட்ரோல் கொட்டியது. இதற்கிடையில் திடீரென்று தான் தயாராக வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து ரிச்சர்டு பிராங்ளின் தீயை பற்ற வைத்தார். இதில் அவருடைய உடல் தீப்பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அலறினார். இதை பார்த்த ஆசிய ஜெர்சி கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீப்பற்றியது. இதில் அவரும் உடல் கருகினார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போதகரும், அவருடைய மனைவியும் இறந்து விட்டதால், அவர்களின் 2 மாத கைக்குழந்தை அனாதையாக தவிக்கிறது.

தாயின் அரவணைப்பிலும், தந்தையின் அறிவுரையிலும் வளர வேண்டிய குழந்தை பிறந்த, 2 மாதங்களில் பெற்றோரை இழந்து தவிப்பது அனைவரின் கண்ணிலும் கண்ணீரை வரவழைக்கிறது.

மேலும் செய்திகள்