சேலத்தில் தொழில் முதலீட்டு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - 3 மணி நேரம் தீவிர சோதனை

சேலத்தில் தொழில் முதலீட்டு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தீவிர சோதனைக்கு பிறகு அது புரளி என்பது தெரியவந்தது.

Update: 2018-10-24 23:13 GMT
சேலம்,

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தின் முதல் தளத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சேலம் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மூலம் தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அலுவலர்கள், ஊழியர்கள் என 15-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அலுவலக கிளை மேலாளர் பேபி நேற்று மாலை அலுவலகத்தில் உள்ள ஒரு கணினியில் இ.மெயில்களை பார்வையிட்டார். அப்போது அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டாக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் தலைமையில் நிபுணர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு உள்ளதா? என்று அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக தீவிரமாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனை 3 மணி நேரம் நீடித்தது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் பிங்கி வரவழைக்கப்பட்டது. அது அலுவலகம் முழுவதும் சுற்றி, சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு சொந்தமான இந்த அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த இ.மெயிலை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் அது புரளி என்று தெரிய வந்தது.

மேலும் முதல் கட்ட விசாரணையில் இந்த அலுவலக இ.மெயிலில் இருந்து, இதே அலுவலகத்தில் உள்ள மற்றொரு கணினிக்கு மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே இந்த அலுவலக மெயிலின் கடவுச்சொல்லை பற்றி தெரிந்தவர்கள் தான் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து இருக்க வேண்டும்.

எனவே அலுவலகத்தில் பணிபுரியும் யாராவது ஒருவருக்கு பணிச்சுமை இருந்து இருக்கலாம். அல்லது அலுவலக பணியில் உயர் அதிகாரிகள் கெடுபிடி கொடுத்து இருக்கலாம். அல்லது அலுவலக நிர்வாகத்தில் ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே விரைவில் வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் கண்டு பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள்.

நேற்று மாலை 5.45 மணிக்கு தொடங்கிய வெடிகுண்டு சோதனை இரவு 8.45 மணி வரை 3 மணி நேரம் நீடித்தது. இதனால் நேற்று சம்பந்தப்பட்ட அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வியாபார நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்