போரூர் இந்தியன் வங்கியில் ரூ.62 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது தினமும் ரூ.10 ஆயிரம் திருடி மதுகுடித்து வந்ததாக போலீசில் வாக்குமூலம்
போரூர், இந்தியன் வங்கியில் ரூ.62 லட்சத்தை மோசடி செய்ததாக காசாளரை போலீசார் கைது செய்தனர். தினமும் ரூ.10 ஆயிரம் வீதம் திருடி மதுகுடித்து வந்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இதன் மேலாளராக ஜனனி உள்ளார். இந்த வங்கியில் சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(வயது 42) என்பவர் காசாளராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் இந்த வங்கியின் மேலாளர் ஜனனி, வங்கி கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். அதில் சுமார் ரூ.62 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர், வங்கியின் காசாளரான சுரேஷ், ரூ.62 லட்சம் வரை வங்கி பணத்தை திருடி, மோசடி செய்து இருப்பதாக போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாராமன் வழக்குப்பதிவு செய்து, வங்கியின் காசாளர் சுரேசை கைது செய்து விசாரித்தார்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில் ‘வங்கியில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கடந்த 3 ஆண்டுகளாக தினமும் ரூ.10 ஆயிரம் வீதம் திருடி, அந்த பணத்தில் மது குடித்து செலவு செய்து வந்ததாகவும் இதுவரையிலும் சுமார் ரூ.62 லட்சம் வரை வங்கி பணத்தை மோசடி செய்ததாகவும்’ அவர் தெரிவித்தார் என்றனர்.