புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்கக்கோரி: 11 கிராம மக்கள் சாலை மறியல் - சிதம்பரம் அருகே பரபரப்பு
பாசிமுத்தான் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்கக்கோரி நேற்று 11 கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ளது லால்புரம் ஊராட்சி. இங்குள்ள பாசிமுத்தான் ஓடையின் குறுக்கே பாலம் இருந்தது. மணலூர், பாலூத்தாங்கரை, தையாக்குப்பம், அம்பலத்தாடிகுப்பம், மேலமூங்கிலடி, கீழமூங்கிலடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த பாலத்தை கடந்து தான் சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
இந்த பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற அதிகாரிகள் பாலத்தை இடித்து அகற்றி விட்டு, அதன் அருகில் தற்காலிக பாலம் அமைத்தனர்.
இதையடுத்து லால்புரத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் தற்காலிக பாலத்தை பயன்படுத்தி வந்தனர். மேலும் அந்த இடத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் புதிதாக பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இந்த பணி ஆரம்பத்தில் இருந்தே மந்தமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பாசிமுத்தான் ஓடையில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்காலிக பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் புதிய பாலம் கட்டும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக லால்புரம் உள்ளிட்ட பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சிதம்பரம் புறவழிச்சாலைக்கு சென்று சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த லால்புரம் உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று காலை மணலூரில் இருந்து லால்புரம் புறவழிச்சாலைக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தாசில்தார் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஜாகீர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடனமயிலோன், முனிசங்கர், முன்னாள் கவுன்சிலர் இளவரசி, லதா ராஜேந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கிராம மக்கள், பாசிமுத்தான் ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெறுவதாலும், தற்காலிக பாலம் தண்ணீரில் மூழ்கியதாலும் எங்கள் பகுதிக்குள் பஸ்கள் வராமல் புறவழிச்சாலையிலேயே செல்கின்றன. இதனால் எங்கள் பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் புறவழிச்சாலைக்கு சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி வந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதனால் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.