மும்பை கடலில் சத்ரபதி சிவாஜி நினைவிடம் கட்டும் பணி: அரசு அதிகாரிகள் சென்ற படகு கவிழ்ந்தது ஒருவர் பலியான பரிதாபம்
மும்பை கடலில் சத்ரபதி சிவாஜி நினைவிடம் கட்டும் பணிக்காக அரசு அதிகாரிகள் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த படகில் சென்ற கட்சி பிரமுகர் ஒருவர் பலியானார்.
மும்பை,
மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட நினைவிடம் கட்டப்பட உள்ளது.
பிரமாண்ட சிலை
இந்த நினைவிடம் ரூ.3 ஆயிரத்து 800 கோடி செலவில் உருவாகிறது. இதில் சத்ரபதி சிவாஜி வாளுடன் குதிரையில் அமர்ந்திருப்பது போல 695 அடி உயரத்திற்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது.
சத்ரபதி சிவாஜி நினைவிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வைத்தார்.
கவிழ்ந்த படகு
சத்ரபதி சிவாஜி நினைவிடம் கட்டுவதற்கான களப்பணிகளை பூஜை செய்து நேற்று தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 4 மணியளவில் மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள், சில கட்சி பிரமுகர்கள் என 25 பேர் ஒரு படகில் நினைவிடம் அமைய உள்ள இடத்திற்கு புறப்பட்டனர். அந்த படகு கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து கிளம்பியது. மாநில அரசின் தலைமை செயலாளர் தினேஷ் குமார் ஜெயின் உள்ளிட்டவர்கள் இன்னொரு படகில் சென்றனர். மொத்தம் 4 படகுகளில் ஆட்கள் சென்றனர்.
இதில் அரசு அதிகாரிகள் உள்பட 25 பேர் சென்ற படகு நினைவிடம் அமைய உள்ள இடத்திற்கு அருகில் சென்றபோது திடீரென பாறையில் பயங்கரமாக மோதியது. இதனால் அந்த படகு கடலில் கவிழ்ந்து மூழ்க தொடங்கியது.
ஒருவர் பலி
தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், கடற்படையினர் அங்கு விரைந்தனர். மேலும் மீட்பு பணியில் 2 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதில் அந்த படகில் இருந்த அதிகாரிகள் உள்பட 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்பு படையினர் மீட்டனர். உயிரிழந்தவர் சிவசங்ராம் கட்சியை சேர்ந்த பிரமுகர் சித்தேஷ் பவார் (வயது 20) என்று தெரியவந்தது.
முதலில் தலைமை செயலாளர் சென்ற படகு விபத்தில் சிக்கியதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால் அவர் வேறு படகில் சென்றதாகவும், அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து சத்ரபதி சிவாஜி நினைவிட களப்பணி தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது.
விபத்தில் உயிர் தப்பிய பாலாசாகிப் கூறுகையில், ‘‘நாங்கள் சென்ற படகு வேகமாக சென்றது. அப்போது திடீரென படகு எதிலோ மோதியது. அடுத்த சில நொடிகளில் படகிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது’’ என்றார்.
விசாரணை
தலைமை செயலாளர் தினேஷ் குமார் ஜெயின் கூறுகையில், “அனைவரையும் பத்திரமாக மீட்பதே எங்கள் முதல் நோக்கமாக இருந்தது. ஆனாலும் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் விபத்துக்கான கூடுதல் காரணங்கள் தெரியவரும்” என்றார்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “இந்த படகு விபத்து துரதிருஷ்டவசமானது. கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து உதவியதால் பெரிய அளவில் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும். விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்” என்றார்.