வேலை தராமல் ஏமாற்றப்பட்டதால் மனநலம் பாதிப்பு: சென்னையில் சுற்றித்திரிந்த ஒடிசா வாலிபர் முகநூல் உதவியால் உறவினரிடம் ஒப்படைப்பு
வேலை தராமல் ஏமாற்றப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டு சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் சுற்றித்திரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர், முகநூல் உதவியால் அவரது உறவினர் மற்றும் நண்பரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மடிப்பாக்கம் பஸ்நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மடிப்பாக்கம் போலீசார், அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் நிற்பதை கண்டனர்.
அவர் அந்த மோட்டார்சைக்கிளை திருடுவதற்காக வந்து இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தேவேந்திரபியான் (வயது 21) என தெரியவந்தது.
ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். போலீசாரிடம் அவர் அளித்த செல்போன் எண் மூலமாக அவரது முகநூலை போலீசார் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர்.
அதில் ஐ.டி.ஐ. படித்துள்ள அவர், கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலைக்காக கேரளாவுக்கு சென்றதும், அங்கு வேலை தராமல் ஏமாற்றப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் கேரளாவில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்த அவர், மடிப்பாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் விசாரணை நடத்தினார். மேலும் அந்த வாலிபர் குறித்த தகவல்களை முகநூல் மூலம் போலீசார் பரவ செய்தனர்.
முகநூலில் இதை பார்த்துவிட்டு ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் வசித்து வரும் தேவேந்திரபியானின் உறவினர் மற்றும் நண்பர் ஆகியோர் மடிப்பாக்கம் வந்தனர். அவர்களிடம் தேவேந்திரபியானை மடிப்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர்.