போலீஸ் எனக்கூறி மிரட்டல்: காரில் வந்தவர்களை தாக்கி பணம், செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
போலீஸ் எனக்கூறி காரில் வந்தவர்களை தாக்கி மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பர்கூர்,
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி கோனப்ப அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவா (வயது 47), பிரசன்னா (37), தசவராஜ் (40). நண்பர்களான இவர்கள் நேற்று காலை 5.30 மணி அளவில் காரில் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு புறப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஜெகதேவி என்ற இடத்தில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து காரை நோக்கி வந்த 2 பேரும் காரில் இருந்த சிவா, பிரசன்னா, தசவராஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கி மிரட்டினர். எதற்காக அடிக்கிறீர்கள்? என கேட்டபோது, தாங்கள் குற்றப்பிரிவு போலீசார் என்றும், வேட்டியம்பட்டி ஏரிக்கரை அருகே கார் வந்த போது அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் வந்து விட்டது, இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பலத்த காயத்துடன் உள்ளனர், என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து சிவா, பிரசன்னா, தசவராஜ் ஆகியோரை மிரட்டி அவர்கள் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.22 ஆயிரம் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் 2 பேரும், இனி இதுபோன்று விபத்து ஏற்படுத்தக்கூடாது என எச்சரிக்கை செய்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர்.
இதில் சந்தேகமடைந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள் இதுகுறித்து பர்கூர் போலீசில் புகார் செய்தனர். மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளின் நம்பரை போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் போலீசார் என கூறி மிரட்டி வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பர்கூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டது அவர்கள் தான் என தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கிருஷ்ணகிரி செட்டியம்பட்டியை சேர்ந்த ஹரி (34), கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியை சேர்ந்த பைரவன் (46) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரம், 2 செல்போன்களை மீட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.