18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போகும் என்பது பகல் கனவு - ஓ.பன்னீர்செல்வம்

‘‘18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போகும் என்பது பகல் கனவு’’ என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Update: 2018-10-24 23:15 GMT

மதுரை,

மதுரையில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி ஜெயலலிதா பேரவை சார்பில் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது.

பேரணியை துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:–

எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க.வை ஜெயலலிதா மாபெரும் இயக்கமாக உருவாக்கி காட்டினார். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எந்த குறையும் சொல்ல முடியாத நல்லாட்சியாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.

இது நம்மை விட்டுச்சென்ற துரோகிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தான் அவர்கள் இந்த ஆட்சி நீடிக்காது என்று கூறுகிறார்கள். ஆனால் 1½ ஆண்டுகளை கடந்து இந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போகும் என்று தினகரன் ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் பகல் கனவு காண்கிறார்கள். அவர்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள். அ.தி.மு.க. என்ற இயக்கம் தொண்டர்களின் இயக்கம். இங்குள்ள 1½ கோடி தொண்டர்களில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வர முடியும். துரோகிகளின் பகல் கனவு பலிக்காது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்று, அந்த வெற்றி வேலை திருப்பரங்குன்றம் முருகனுக்கு சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்