உரிமம் பெறாத மது ‘பார்’களை மூட எடுத்த நடவடிக்கை என்ன? அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

உரிமம் பெறாத டாஸ்மாக் மது பார்களை மூட எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-24 23:00 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த அண்ணாதுரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் உள்ள கீரனூரில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள்தோறும் ரூ.1½ லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2016–ம் ஆண்டு இந்த டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து ‘பார்’ நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு பார் நடத்துவதற்கான வைப்புத்தொகை அதிகரிக்கப்பட்டது. அந்த தொகையை செலுத்த பார் உரிமையாளர்கள் முன்வரவில்லை. இதையடுத்து ஏராளமான பார்கள் மூடப்பட்டன. குளத்தூர் தாலுகாவில் பார்கள் மூடப்பட்டதால் அரசுக்கு மாதந்தோறும் ரூ.3 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் உரிமத்தை புதுப்பிக்காமல் எங்கள் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து, மது ‘பார்’களை சட்டவிரோதமாக நடத்தி வருகின்றனர். இதுபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் உரிமம் பெறாமல் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் உரிமம் இல்லாமல் செயல்படும் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி, புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தில் ஏராளமான இடங்களில் சட்டவிரோதமாக பார்கள் நடத்தப்படுகின்றன, என்று வாதாடினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எச்.ஆறுமுகம், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததற்காக 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதியின்றி பார் நடத்தியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன’’ என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘அதிகாரிகளின் தயவில் ஏராளமான இடங்களில் அனுமதியின்றி ‘பார்’கள் நடத்தப்படுகின்றன. இதனால் அரசுக்கு நிறைய வருவாய் இழப்பு ஏற்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

பின்னர், உரிமம் பெறாமல் நடத்தப்படும் டாஸ்மாக் பார்களை மூட எடுத்த நடவடிக்கை என்ன? இனி எடுக்க உள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசின் உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 9–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்