ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் கர்ப்பிணி அனுமதி டாக்டர்கள் தீவிர சிகிச்சை

பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Update: 2018-10-24 22:30 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொசு மருந்து அடிப்பது, பன்றி காய்ச்சல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் தடுப்பு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்குவது உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

எனினும் நாகர்கோவில் சற்குணவீதியை சேர்ந்த திரேஷா (வயது 60) என்ற ஓய்வுபெற்ற பேராசிரியை பன்றி காய்ச்சலுக்கு பரிதாபமாக இறந்தார். மேலும் பலர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் 2 சிறுவர்கள், ஒரு வாலிபர் மற்றும் ஒரு இளம்பெண் என மொத்தம் 4 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே வசித்து வரும் கர்ப்பிணி ஒருவர் காய்ச்சால் அவதிப்பட்டு வந்தார். அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக உறவினர்கள் அழைத்து வந்தனர். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் பன்றி காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவருடன் சேர்த்து ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகர்கோவில் நகராட்சி பகுதியிலும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. நகர பகுதியில் 298 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பணியாற்றி வரும் 12 பணியாளர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது ஆணையர் சரவணகுமார் மேற்பார்வையில் நகர்நல அதிகாரி கிங்ஷால் அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து நகர்நல அதிகாரி கிங்ஷால் தலைமையில் நாகர்கோவில் நகர் முழுவதும் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணி நேற்று நடந்தது. நகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது வீடுகளில் தேவையில்லாத இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா? யாரேனும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்களா? என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் இன்னும் 5 நாட்கள் வரை மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் செய்திகள்