கோத்தகிரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடக்கம்

கோத்தகிரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2018-10-24 22:15 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள டான் போஸ்கோ பகுதியில் இருந்து கோட்டாஹால் பகுதிக்கு செல்லும் நடைபாதை மற்றும் குடிநீர் குழாய்கள் செல்லும் பாதைகளை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிடக்கோரியும் சின்னசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சம்பந்தப்பட்ட பகுதியில் பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகள் உறுதி செய்யப்பட்டு, அதற்கான அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை கோட்டாஹால் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் தலைமையில் தாசில்தார் ரவிக்குமார், வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், சுகாதார ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் லதா ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் அந்த பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி மற்றும் தற்காலிக கூடாரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு நடைபாதை அகலப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்