கொள்ளை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத தொழிலாளி போலீசில் சிக்கினார் - மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
கொள்ளை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.;
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் நூற்பாலை பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி சந்தேகப்படும் வகையில் 8 பேர் நின்று கொண்டு இருந்தனர். இதனை கவனித்த பொதுமக்கள் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 8 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தார்கள்.
அப்போது அவர்களிடம் கத்தி மற்றும் மிளகாய்ப்பொடி இருந்ததும், அவர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களான திருச்சியை சேர்ந்த கலியமூர்த்தி, லோகநாதன், சரவணன், ரகுநாதன், ராமகிருஷ்ணன், கணேசமூர்த்தி, செல்வம், பாஸ்கரன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்த வழக்கு பவானி கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் கலியமூர்த்தி இறந்துவிட்டார். மற்றவர்களான சரவணன், ராமகிருஷ்ணன், கணேசமூர்த்தி, செல்வம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி விடுதலை பெற்றனர். ஆனால் ரகுநாதன், லோகநாதன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனால் பவானி கோர்ட்டு அவர்கள் 3 பேருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி பிடிவாரண்டு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடிக்க அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி கல்லிகுடி பகுதியில் தொழிலாளியான பாஸ்கரன் (வயது 38) பதுங்கி இருப்பதாக நேற்று தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று பாஸ்கரனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகநாதன் மற்றும் ரகுநாதன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட பாஸ்கரனை பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.