இந்தியாவில், புற்றுநோயை காட்டிலும் பாதுகாப்பற்ற குடிநீரினால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்

இந்தியாவில் புற்றுநோயை காட்டிலும் பாதுகாப்பற்ற குடிநீரினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கோவையில் நடந்த சுற்று சூழல் பாதுகாப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-10-24 22:45 GMT

கோவை,

சுற்றுசூழல் மதிப்பீடு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகம், குளோபல் கேர் அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான சர்வதேச சுற்று சூழல் பாதுகாப்பு மாநாடு கோவையில் நடந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா, இத்தாலி, ஸ்பெயின், கனடா, அமெரிக்கா, ஹாங்காங், இங்கிலாந்து உள்ளிட்ட 15–க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் 300–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழக பேராசிரியர் ரவிநாயுடு, முனைவர் பிரசாந்த் ஸ்ரீவஸ்தவா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக டீன் மகிமை ராஜா, ஆவுடைநாயகம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

உலகமெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் நிலம், நீர், காற்று ஆகியவை பெரிதும் மாசு அடைந்துள்ளது. விவசாய நிலம் உள்ளிட்ட நிலங்களும், நிலத்தடி நீரும் ரசாயனங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் 12 பேரில் ஒருவர் பாதுகாப்பில்லாத சுற்றுச்சூழல் பிரச்சினையால் இறப்பதாகவும், சுமார் 70 லட்சம் பேர் காற்று மாசு காரணமாகவும், 50 லட்சம் பேர் ரசாயனப் பாதிப்புகளாலும் உயிரிழப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவில் ரசாயனம் கலந்த நீரைப் குடிப்பதால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். புற்றுநோயால் உயிரிழப்பவர்களை காட்டிலும், பாதுகாப்பற்ற குடிநீரினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

தொழில் துறை வளர்ச்சியும், விவசாய புரட்சிகளும்கூட மண்ணை பாதித்துள்ளன. இந்தியாவிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வேலூர் மாவட்டத்தை தோல் கழிவுகளும், கொங்கு மண்டலத்தை சாயக்கழிவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளன. மண்ணிலும், நீரிலும் உள்ள உப்பின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. குரோமியம் கலந்த ரசாயனங்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பல நாடுகளின் அரசுகளும், தொழில்துறையும் இப்போதுதான் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஐரோப்பாவைச் சேர்ந்த ரசாயன நிறுவனம் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ரசாயனங்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 200 புதிய ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. உலகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே சுத்தம் செய்யப்படுகின்றன. காலநிலை மாற்றத்தைக் காட்டிலும் ரசாயன மாசுவின் தாக்கம் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே, இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பாதிப்புக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். இந்த மாநாட்டில் சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று, பல்வேறு கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர். கள ஆய்வும் நடைபெற உள்ளது. மாநாட்டு முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அனைத்து நாடுகளின் அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்