பொள்ளாச்சி, பல்லடம், நெல்லையில் பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி
பொள்ளாச்சி, பல்லடம், நெல்லையில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கிருஷ்ணகிரியில் மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலியானார்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சோமந்துறை சித்தூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42), கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த மாதிரியை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதை அறிந்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு மீண்டும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உறவினர்கள் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குறையாமல் மேலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மகேந்திரனின் உறவினர்கள் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். மகேந்திரன், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆனைமலை வட்டார மருத்துவ அதிகாரி தலைமையில் சோமந்துறை சித்தூர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். இதுதவிர அங்கு அபேட் மருந்து மற்றும் கொசு புகை அடிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கசாமி. இவருடைய மகள் பத்மா (33). இவருக்கும், வாவாநகரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த காசிப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுதாகர் (10) என்ற மகன் உள்ளான். இவன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக பத்மா தனது கணவரை விட்டு பிரிந்து கடந்த 3 வருடங்களாக மலையடிக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பத்மாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருடைய ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்தபோது, பத்மா பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் பத்மா பரிதாபமாக இறந்தார்.
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புடன் 120-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (65), மதுரை குலமங்கலம் பகுதியை சேர்ந்த சுசீலா (55), மதுரை அழகாபுரியை சேர்ந்த ராம்ராஜ் (52), திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் (19) ஆகிய 4 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்தபோது அதில் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனி வார்டில் வைத்து கவனிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் பல்லடம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் என்பவர் நேற்று பரிதாபமாக இறந்துபோனார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மேலும் 2 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே உள்ள சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகள் சரண்யா (16). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக சரண்யா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரை அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இதன்பின்னர் சரண்யாவை அவரது பெற்றோர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.