நாட்டு கோழி வளர்க்க விரும்பும் பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக் கோழிகள் வளர்க்க விரும்பும் பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.;
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பெண் பயனாளிகளுக்கு புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் அசில் நாட்டுக்கோழி வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஏழ்மை நிலையில் உள்ள 2 ஆயிரத்து 400 பெண் பயனாளிகளுக்கு தலா 50 கோழிகள் வீதம் வழங்கப்பட உள்ளது. இதில் கோழிகளுக்கான கோழிக்கூண்டும் சேர்த்து வழங்கப்படுகிறது.
எனவே அந்தந்த பகுதி கிராம பஞ்சாயத்துகளில் நிரந்தரமாக வசிக்கும் பெண் பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிகள் வளர்க்க விரும்பினால், அந்தந்த பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், 30 சதவீதம் பயனாளிகள் தாழ்த்தப்பட்டவகுப்பினர், பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.