திண்டுக்கல்லில் பயங்கரம்: தனியார் மில்லில் வாலிபர் கொன்று புதைப்பு - நண்பரிடம் போலீசார் விசாரணை
திண்டுக்கல்லில், வாலிபரின் தலையில் கல்லைப்போட்டு நண்பரே கொலை செய்து அவருடைய உடலை தனியார் மில்லில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்த தம்பிராஜ் என்பவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (வயது 26). இவர் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு, ஒரு வருடத்துக்கு முன்பு வான்மதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் அனைவரும் பொன்னகரத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
பாலசுப்பிரமணியனின் நண்பர் ஒருவர் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே அமைந்துள்ள ஒரு தனியார் நூற்பு ஆலையை குத்தகைக்கு எடுத்துள்ளார். அவர், தொழில் சம்பந்தமாக பாலசுப்பிரமணியனிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை பாலசுப்பிரமணியம் திரும்ப கேட்டுள்ளார்.
ஆனால் அவருடைய நண்பர் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் பாலசுப்பிரமணியனை தேடி வந்தனர். மேலும் அவருடைய நண்பரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவரும் போலீசாருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியனை தேடியுள்ளார். நண்பர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் பாலசுப்பிரமணியனை தன்னுடைய மில்லுக்கு அழைத்து சென்று தலையில் கல்லை போட்டு கொன்று, உடலை அங்கேயே புதைத்துவிட்டதாக அவருடைய நண்பர் கூறியுள்ளார்.
அவரை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர், பாலசுப்பிரமணியனை கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். பின்னர் இதுகுறித்து திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் ராஜேஸ்வரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதற்குள் இரவாகிவிட்டதால், பாலசுப்பிரமணியனின் உடலை இன்று (வியாழக்கிழமை) தோண்டி எடுக்க போலீசார் மற்றும் வருவாய்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் அந்த மில் முன்பு திரண்டனர். ஆனால் மில் வளாகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் நண்பரே, வாலிபரின் தலையில் கல்லைப்போட்டு கொன்று உடலை புதைத்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.