குற்றாலத்தில் பரபரப்பு: தங்கியிருந்த இடத்தை மாற்றிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் “27-ந் தேதி வரை இங்கு இருப்போம்” என பேட்டி
குற்றாலத்தில் இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீரென தாங்கள் தங்கியிருந்த இடத்தை மாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், “வருகிற 27-ந் தேதி வரை நாங்கள் இங்கு தங்கியிருப்போம்“ என அவர்கள் தெரிவித்தனர்.
டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இது தொடர்பாக அந்த எம்.எல்.ஏ.க்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதனால் 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்து முடித்துள்ளார். இதன் தீர்ப்பு விரைவில் வர உள்ளது.
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்கியிருக்குமாறு டி.டி.வி.தினகரன் அறிவுறுத்தினார். அதன்பேரில், தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கதிர்காமு (பெரியகுளம்), சுப்பிரமணியன் (சாத்தூர்), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), முத்தையா (பரமக்குடி), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி) ஆகிய 8 பேரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் கடந்த 22-ந் தேதி பழைய குற்றாலம் வந்து, இசக்கி ரிசார்ட்டில் முகாமிட்டனர்.
நேற்று முன்தினம் அவர்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழாவையொட்டி புனித நீராடினர். பின்னர் அங்கு நடந்த யாகத்தில் கலந்து கொண்டனர். அங்கிருந்து மாலையில் குற்றாலத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள், இரவில் பழைய குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்காமல் இடத்தை மாற்றினார்கள். அதாவது, குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதிக்கு சென்று தங்கினார்கள். திடீரென அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்தை மாற்றியது குற்றாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, இடம் மாறிய சொகுசு விடுதிக்கு நேற்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), ஏழுமலை (பூந்தமல்லி) ஆகியோர் வந்தனர்.
இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. நேற்று காலை ஐந்தருவி சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் வருகிற 27-ம் தேதி வரை குற்றாலத்தில் தங்கி இருப்போம். வருகிற 10-ம் தேதி முதல் தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம். எங்களோடு 20 எம்.எல்.ஏக்கள் இங்கு உள்ளனர். எங்களுக்கு தோல்வி பயம் இல்லை. நீதிமன்ற தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கவில்லை. தீர்ப்பு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அமைச்சர்களை மாற்றி விட்டு அ.தி.மு.க. ஆட்சியை நடத்துவோம்.
வருகிற 27-ம் தேதி அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரை வருகிறார். அப்போது நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை சந்திப்போம்
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது மக்கள் விரும்பாத ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் செயலால் அ.தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை மக்களே அகற்றுவார்கள். நீதிமன்ற தீர்ப்புக்காக நாங்கள் இங்கு வரவில்லை. அனைவரும் கலந்து ஆலோசனை செய்வதற்காக தான் இங்கு வந்துள்ளோம். இன்னும் 2 நாட்கள் இங்கு தங்கி இருப்போம்“ என்றார்.
தொடர்ந்து மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி, சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தங்க தமிழ்ச்செல்வன் நேற்று மதியம் மதுரை புறப்பட்டு சென்றார்.