அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டியின் இணைப்பு உடைந்தது பெட்டிகள் தனியாக பிரிந்து சென்றதால் பரபரப்பு
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டியின் இணைப்பு உடைந்ததால் பெட்டிகள் தனியாக பிரிந்து சென்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை அத்திப்பட்டிற்கு நிலக்கரி ஏற்றுவதற்காக நேற்று 59 பெட்டிகளுடன் காலி சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த ரெயில் காலை 10.25 மணி அளவில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த போது ரெயிலின் 47 மற்றும் 48-வது பெட்டியின் இணைப்பு ‘கப்லிங்’ உடைந்து 47 பெட்டிகள் தனியாகவும், 12 பெட்டிகள் தனியாகவும் சென்றன.
இதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர், ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் மனோகரன், ரெயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள், சிப்பந்திகள் ஆகியோர் அங்கு சென்று உடைந்த இணைப்பு கப்லிங்கை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 10.45 மணி அளவில் இணைப்பு கப்லிங் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு 59 பெட்டிகளுடன் திருவாலங்காடு யார்டு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இணைப்பு கப்லிங்கை ரெயில்வே அதிகாரிகள் முழுமையாக சரிசெய்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக மைசூரில் இருந்து சென்னை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 3-வது பிளாட்பாரத்தில் ½ மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அரக்கோணத்தில் நிறுத்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சரக்கு ரெயிலில் இணைப்பு கப்லிங்கை ரெயில்வே ஊழியர்கள் சரிசெய்யும் போது ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் ரஜாக், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.