சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர், 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மிதந்தார்

சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர், 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மிதந்தார்.

Update: 2018-10-23 22:45 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் சுலோச்சனா நகரை சேர்ந்தவர் கேசவன். இவர் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இனிப்பு கடை வைத்துள்ளார். இவருடைய மகன் மணி(வயது 20). இவர் கடையில் கேசவனுக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி மணி தனது நண்பரான கீரப்பாளையம் மேலத்தெருவை சேர்ந்த குமரவேல் மகன் அஜித்குமாருடன்(24) ஒரு மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் இருவரும் சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மணி ஓட்டினார்.

சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் கான்சாகிப் வாய்க்கால் பாலத்தில் உள்ள வளைவில் திரும்பிய போது, பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் வாய்க்காலின் உள்ளே விழுந்தனர்.

வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இதில் அஜித்குமார், நீந்தி கரைக்கு திரும்பினார். ஆனால் மணியை காணவில்லை. இதுபற்றி அறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வாய்க்காலில் விழுந்த மணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அன்று இரவு நேரம் ஆகிவிட்டதால் மணியை தேடும் பணியை வீரர்கள் கைவிட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி மணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மணியை பற்றிய எந்தவொரு விவரமும் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் சாரதாராம் நகர் பின்புறத்தில் உள்ள கான்சாகிப் ஓடையில் மணி பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்