மோட்டார் சைக்கிளில் ஒப்பந்ததாரர் வைத்து இருந்த 8 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது
பெருமாநல்லூரில், மோட்டார் சைக்கிளில் ஒப்பந்ததாரர் வைத்து இருந்த 8 பவுன்நகையை திருடிக்கொண்டு ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெருமாநல்லூர்,
பெருமாநல்லூர் அருகே உள்ள காளிபாளையம் பிரிவு வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 43). பனியன் நிறுவனத்தில் வேலைகளை ஒப்பந்தம் எடுத்து ஆட்கள் மூலம் வேலை செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நகையை அடகு வைக்க முடிவு செய்தார். இதற்காக வீட்டில் இருந்து 8 பவுன் நகையை எடுத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் பெருமாநல்லூர் வந்தார். அப்போது உறவினர் ஒருவரையும் அழைத்து சென்றார். நகைப்பையை பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து இருந்தார்.
பெருமாநல்லூர் வந்ததும், அங்குள்ள பேக்கரி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இருவரும் கடைக்குள் சென்று டீ குடித்தனர். அப்போது ஒரு ஆசாமி, மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த நகைப்பையை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். உடனே நடராஜ் “திருடன், திருடன்”கூச்சலிட்டார். அப்போது அங்கிருந்து பொதுமக்கள் அந்தஆசாமியை விரட்டி சென்று பிடித்து தர்ம அடி கொடுத்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கணக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கண்ணன் (25) என்று தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் குடியிருக்கும் வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பது, மதுபோதையில் இருக்கும் ஆசாமிகளை நோட்டமிட்டு அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் பறித்து செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 8 பவுன்நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கண்ணனை கைது செய்த போலீசார் அவரை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.