புளியந்தோப்பில் சாலையில் மணல் கழிவுகள்; வாகன ஓட்டிகள் அவதி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

புளியந்தோப்பில் சாலையில் தேங்கும் மணல் கழிவுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

Update: 2018-10-23 23:10 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல மாதங்களாக இந்த கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளுக்காக செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள மணல் கழிவுகள் அங்கு வரும் கனரக லாரிகளின் சக்கரங்களில் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் அந்த லாரிகள் சாலையில் செல்கிற போது மணல் கழிவுகள் சாலையில் சிதறி கால போக்கில் திட்டு திட்டாகவும், புழுதியாகவும் மாறி விடுகின்றன.

இதனால் கட்டுமான பணி நடைபெறும் பகுதியை சுற்றி உள்ள ஸ்டிபன்சன் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, குக்ஸ் சாலை ஆகிய 3 சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

அடிக்கடி விபத்து

கட்டிட கழிவுகள் மற்றும் மணல் திட்டுகளால் மூடப்பட்ட இந்த சாலைகளை தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் இதனால் அந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதோடு புழுதி காரணமாக கண் எரிச்சல், அலர்ஜி ஏற்பட்டு உடல் ரீதியாகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்த போதும், முறையான நடவடிக்கை எடுக்காமல் பெயரளவிற்கு மட்டும் சாலையை சுத்தப்படுத்திவிட்டு பணி முடிந்து விட்டதாக கூறிவிடுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தபட்ட உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி சாலையில் உள்ள மணல் கழிவுகளை முழுமையாக அகற்றவும், மீண்டும் கழிவுகள் சேராத வகையிலும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்