திவாவில் ரெயிலில் அடிபட்டு தங்கை சாவு; அக்காள் படுகாயம்

திவாவில் ரெயிலில் அடிபட்டு தங்கை உயிரிழந்தார். அவரது அக்காள் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-10-23 23:09 GMT
தானே,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள திவா ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தையொட்டி நேற்று முன்தினம் காலை பெண்கள் இருவர் இயற்கை உபாதை கழிக்க வந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக சி.எஸ்.எம்.டி. நோக்கி விரைவு மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

இதை அந்த பெண்கள் கவனிக்கவில்லை. இதனால் இருவர் மீதும் ரெயில் மோதி சென்றது. இதில் படுகாயம் அடைந்த 2 பெண்களையும் ரெயில்வே போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பெண் மேல் சிகிச்சைக்காக மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விசாரணையில் பலியான பெண் புனேயை சேர்ந்த சங்கீதா (வயது 50) என்பதும், படுகாயம் அடைந்தவர் அவரது அக்காள் காந்தாபாய் (60) என்பதும் தெரியவந்தது.

அவர்கள் திவாவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் தங்களது பேத்தியை பார்க்க வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அவர்கள் ரெயிலில் அடிபட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்