ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-23 23:00 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய தலைவர் செல்வக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சொர்ண குமார், நகர செயலாளர் தமிழ்மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தீபாவளி கருணைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு வழங்கிய உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக விரிவு செய்ய வேண்டும். குறைந்த பட்ச கூலி ரூ.500 வழங்க வேண்டும். தேசிய வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதியிலும் செயல்படுத்த வேண்டும்.

புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல் படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கண் டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்