நெல்லையில் மகா புஷ்கர நிறைவு விழா: தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி - 3 அமைச்சர்கள் தரிசனம்
நெல்லையில் நடைபெற்ற மகா புஷ்கர நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை,
144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சிறப்பு வாய்ந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி நெல்லை கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் மகா புஷ்கர நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
இந்தியாவில் வற்றாத ஜீவநதிகளில் தாமிரபரணியும் ஒன்றாகும். இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவில் அரசின் பங்களிப்பு இல்லை என்று கூறமுடியாது. ஏனென்றால் கடந்த மாதம் நாகர்கோவிலுக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றபோது நானும், அமைச்சர் ராஜலட்சுமியும் அவரை சந்தித்து பேசினோம். அப்போது தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய கேட்டுக்கொண்டோம். அப்போது எடப்பாடி பழனிசாமி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்களை அழைத்து இதுதொடர்பாக ½ மணி நேரம் பேசினார். அனைத்து ஏற்பாடுகளை செய்யவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். மகா புஷ்கர விழாக்களில் அதிகபட்சமாக 50 லட்சம் மக்கள் புனித நீராடி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி இருந்தும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் அரசு இந்த விழாவை நடத்தி உள்ளது. எந்த குறையும் இல்லாமல் தமிழக அரசு விழாவை நடத்தி கொடுத்துள்ளது. இந்த விழாவின் பின்னணியில் தமிழக அரசு இருந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:-
உலகம் சமநிலை பெறுவதற்கு சிவனால் அகஸ்தியருக்கு தாமரை மாலை அணிவிக்கப்பட்டு தென்திசைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டார். அந்த மாலையுடன் அகஸ்தியர் தென் திசை நோக்கி வந்தார். பொதிகை மலையில் அந்த தாமரை மாலை பெண்ணாக மாறி, பின்னர் நதியாக மாறி ஓடியதுதான் தாமிரபரணி ஆறு என்று போற்றப்படுகிறது. இதை கதை, புராணம், வரலாறு என்று எடுத்துக்கொள்ளலாம். இதற்கான ஆவணங்களை கீழ்திசை சுவடிகள் ஆவண காப்பகத்தில் இருந்து புலவர் மகாதேவன் தேடிப்பார்த்து வெளியிட்டு உள்ளார். இதை அறிவியல் பூர்வமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் சமநிலை அடைதல் என்று கூறுவார்கள். சுற்றுச்சூழல் சமநிலைக்கு ஒரு முனிவர் அனுப்பி வைக்கப்பட்டார் என்பது ஆன்மிகமாக இருந்தாலும், அது அறிவியல் பூர்வமாகவும் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தாமிரபரணி நதிக்கு விழா எடுத்திருப்பதில் பெருமை அடைவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து தாமிரபரணி மகா புஷ்கர நிறைவு விழா மலரை அமைச்சர்கள் வெளியிட்டனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் தீப ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் 7 சிவாச்சாரியார்கள் நின்று வேத மந்திரங்கள் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி காண்பித்தனர். அப்போது அமைச்சர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் மலர்களை தூவி விழா நிறைவு செய்யப்பட்டது. அப்போது தாமிரபரணி அன்னையை போற்றி எழுதப்பட்ட பாடல், இசையுடன் பாடப்பட்டது. மேலும் பக்தர்கள் மீது தாமிரபரணி புனிதநீரும் தெளிக்கப்பட்டது. இந்த விழாவின்போது அமைச்சர் பாண்டியராஜன் தைப்பூச மண்டப படித்துறையில் புனித நீராடி தாமிரபரணி நதியில் வழிபாடு நடத்தினார்.
விழாவில், வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், தருமை ஆதீனம் மீனாட்சி சுந்தரம் தம்பிரான், வடக்கு மட ஆதீனம் வைரவ சுந்தர சுவாமி, நாகர்கோவில் வள்ளலார் பேரவை தலைவர் பக்மேந்திரா சுவாமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, விசுவ இந்து பரிஷத் வேதாந்தம், விழா அமைப்பாளர்கள் உஷா ராமன், நிர்மலா ராமரத்னம், அ.தி.மு.க. நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை செல்லையா தொகுத்து வழங்கினார்.