மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கை அனுமதிக்க வலியுறுத்தி கோவில்பட்டியில், வணிகர்கள் உண்ணாவிரதம்
மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவில்பட்டியில் வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் மூலம் சிறு குறு வணிகர்களை துன்புறுத்த கூடாது. உணவுப்பொருட்களுக்கு 5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையிலான சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) மட்டுமே விதிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை சரக்கு, சேவை வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். தொகுதி செயலாளர் சேதுரத்தினம் வரவேற்று பேசினார்.
தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனிசெல்வம், பேரமைப்பு மாநில துணை தலைவர்கள் ராஜா, வெற்றிராஜன், வைகுண்டராஜன், தசரத பாண்டியன், நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியம், தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, நெல்லை மாநகர தலைவர் குணசேகரன், மாநில இணை செயலாளர்கள் ஜெபஸ் திலகராஜ், வெங்கடேசுவரன், செல்வம், நயன்சிங், மாவட்ட துணை தலைவர் யாபேஷ், இளைஞர் அணி செயலாளர் ஜெயசீலன், மகளிர் அணி தலைவி ராஜம், பொருளாளர் பாஸ்கர் உள்பட திரளான வணிகர்கள் கலந்து கொண்டனர்.