தாசில்தார் அலுவலகங்கள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி கருணை தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகங்கள் முன்பு விவசாய தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-23 23:00 GMT
திருவாரூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். இந்த திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.500 வழங்க வேண்டும். வேலையிழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளி கருணை தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தீன.கவுதமன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் செந்தில், ஒன்றியக்குழு உறுப்பினர் அல்போன்ஸ், ஒன்றிய தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் பக்கிரிசாமி, டேனியல், முத்தையன், செந்தில்குமார், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வீரமணி, மாரிமுத்து, நகர செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜெயராமன், மகேந்திரன், ராஜாங்கம், சிவசண்முகம், கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் இருந்து விவசாய தொழிலாளர்கள் ஊர்வலமாக புறப்பட்டு காந்திரோடு, பந்தலடி, மேலராஜவீதி வழியாக தாசில்தார் அலுவலகத்தை அடைந்தனர்.

அதேபோல் நீடமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ராதா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் செய்திகள்