ஈரோட்டில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் கைது
ஈரோட்டில், சிறுமியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 20–ந்தேதி அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்தபோது அவர்களுடைய மகளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அவருடைய பெற்றோர் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் மோகன்ராஜ் (வயது 27) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமியும், மோகன்ராஜும் அறச்சலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியையும், மோகன்ராஜையும் பிடித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும், பழனி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்ததும்’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர்.