ஆண்டிப்பட்டி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்
ஆண்டிப்பட்டி, கடமலை- மயிலை ஒன்றிய பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.;
ஆண்டிப்பட்டி,
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு குடும்பத்தில் ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுகிறது. எனவே காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சமீப காலமாக, மழை, வெயில் என பருவநிலை மாறி மாறி காணப்படுவதால் ஒருவித வைரசால் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
அதேசமயம் விட்டுவிட்டு காய்ச்சல் வந்தால், கண்டிப்பாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தொடர் காய்ச்சலில் அலட்சியம் காட்டக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.