“தமிழகத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள்”-தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பேச்சு

தமிழகத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள் உள்ளனர் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி கூறினார்.

Update: 2018-10-22 23:15 GMT
மதுரை, 

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக வி.கே.தஹிலரமானி பொறுப்பேற்று கொண்ட பிறகு, முதல் முறையாக மதுரை ஐகோர்ட்டுக்கு வந்தார். அவருக்கு கோர்ட்டு வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் அனைவரும் பங்கேற்றனர். மேலும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு, வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஏ.கே.மாணிக்கம், துரைபாண்டியன், வெங்கடேசன், தியாகராஜன், ஆனந்தவள்ளி உள்பட பலர் வரவேற்று பேசினார்கள்.

பின்னர் தலைமை நீதிபதி பேசும்போது, “மதுரை கோவில் நகரமாகும். இந்த நகரத்தை தென்னகத்தின் ஏதென்ஸ் என்றும் அழைக்கிறார்கள். தமிழ் சங்கங்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த மதுரை ஐகோர்ட்டு கிளையில் 16 நீதிபதிகள் பணியில் உள்ளனர். தேவைப்படும்பட்சத்தில் நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும். நம் நாட்டில் நீதித்துறை பலம் வாய்ந்ததாக உள்ளது. நீதி பரிபாலனத்துக்கு வக்கீல்கள் துணையாக உள்ளனர். நீதிபதிகளும், வக்கீல்களும் ஒரே குடும்பமாக செயல்பட வேண்டும்” என்றார்.

பின்னர் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரில் ஐகோர்ட்டு ஊழியர்கள் குடியிருப்பில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பணிகளை தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார். அதன்பிறகு பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஆரம்பகாலத்தில் பெண்கள் வக்கீல்களாக பணியாற்றுவதில் சிரமம் இருந்தது. ஆனால் அந்த நிலை மாறி, ஆண் வக்கீல்களுக்கு சமமாக பெண்களும் திறமையாக பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் பெண் நீதிபதிகள் உள்ளனர், என்றார்.

மேலும் செய்திகள்