ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் காலில் விழ முயன்ற விவசாயி குடும்பத்தினரால் பரபரப்பு

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி தர்மபுரி கலெக்டர் மலர்விழி காலில் விழ முயன்ற விவசாயி குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2018-10-23 04:15 IST
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் மலர்விழி காரில் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் கார் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத நிலையில் தேவர் ஊத்துப்பள்ளத்தை சேர்ந்த விவசாயி தண்டபாணி, இவரது மனைவி முத்துவேடி, மகன் ருத்தரமூர்த்தி, மகள் கிருபா ஆகியோர் கலெக்டரின் காலில் விழ முயன்றனர்.

இதனை பார்த்த கலெக்டர் மலர்விழி காரில் இருந்து இறங்க முடியாமல் தவித்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் தண்டபாணி மற்றும் அவரது குடும்பத்தினரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அவர் கூறினார். இதை தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய கலெக்டர் அந்த விவசாயியிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

அந்த மனுவில் ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தில் எனக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி தர்மபுரி டவுன் போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீசார் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். கலெக்டர் காலில் விழ முயன்ற விவசாயி தண்டபாணி குடும்பத்தினர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்