கோரிக்கைகளை வலியுறுத்தி உபேர், ஓலா நிறுவன டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உபேர், ஓலா நிறுவன டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2018-10-22 22:30 GMT
மும்பை,

மும்பையில் ஓலா, உபேர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் வாடகை கார்களை இயக்கி வருகின்றன. இதில், தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் வாடகையை அதிகரிக்க வேண்டும், டிரைவர்கள் பயணிகளால் தாக்கப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உபேர், ஓலா நிறுவனத்திற்கு கார் ஓட்டும் டிரைவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவா்கள் குர்லாவில் உள்ள உபேர் நிறுவன அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டிரைவர்கள் சங்க செயலாளர் சுனில் போர்கர் கூறும்போது:-

எங்கள் வருமானத்தை அதிகரித்து தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே அந்தேரியில் உள்ள ஓலா நிறுவனத்தின் அலுவலகத்திற்கும் சென்றோம். அது பூட்டப்பட்டு இருந்தது. எங்கள் பிரச்சினையை அவர்கள் தீர்க்கும் வரை டிரைவர்கள் காரை இயக்க மாட்டார்கள். இது காலவரையற்ற வேலைநிறுத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

டிரைவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மும்பையில் நேற்று தனியார் வாடகை கார்கள் குறைந்தளவே இயக்கப்பட்டன. இதனால் பயணிகளிடம் வழக்கத்தை விட அதிக கட்டணத்தை வாடகை கார் நிறுவனங்கள் வசூலித்தன.

மேலும் செய்திகள்