குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி; மகள் சாவு
குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயன்றார். இதில் மகள் பரிதாபமாக இறந்தார். மகனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர் நகரை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 50). இவர் சீனாபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி திலகவதி (45). டெய்லர். இவர்களுக்கு பிரேஷ் ராஜா (10) என்ற மகனும், சுரக்ஷா (7) என்ற மகளும் உள்ளனர். இதில் பிரவேஷ் ராஜா அந்தப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5–ம் வகுப்பும், சுரக்ஷா 2–ம் வகுப்பு படித்து வந்தனர்.
ராபர்ட்டுக்கும், அவருடைய மனைவி திலகவதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை மீண்டும் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டதில், ராபர்ட், திலகவதியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார்.
இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்து எலி மருந்தை (விஷம்) எடுத்து சாதத்தில் கலந்தார். பின்னர் அந்த சாதத்தை தன்னுடைய குழந்தைகளான சுரக்ஷா மற்றும் பிரவேஷ்ராஜா ஆகியோருக்கு கொடுத்ததோடு, தானும் சாப்பிட்டார். இதனால் அவர்கள் 3 பேரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தனர்.
இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி சுரக்ஷா பரிதாபமாக இறந்தாள். தொடர்ந்து திலகவதி மற்றும் அவருடைய மகன் பிரவேஷ் ராஜா ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் ராம்பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.