சமூக பொறுப்புணர்வு நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

சமூக பொறுப்புணர்வு நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-10-22 22:30 GMT

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் முருகன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:–

கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி இடையிலான மோதலால் மக்கள் பிரச்சினை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மின்கட்டணம், வீட்டு வரி உயர்வு போன்ற பிரச்சினைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. முதல்–அமைச்சர் நாராயணசாமி சமூக பொறுப்புணர்வு நிதியை கையாண்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு நேரடியாக பதில் கூறாமல் கவர்னர் கிரண்பெடி மழுப்பலாக பேசிவருகிறார். நிதியை முறைகேடாக பயன்படுத்தி இருப்பதை கவர்னரின் செயல் வெளிச்சம்போட்டு காட்டுகிறது. விதிகளை பின்பற்றாமல் தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளிடம் நிதி வசூலித்திருப்பது மோசமான முன்னுதாரணமாகும்.

அப்படி செய்தால் சட்டமன்றம் எதற்கு? பட்ஜெட் எதற்கு? கவர்னர் நிதி வி‌ஷயத்தில் ஒழுங்கீனமாக செயல்படுகிறார். எனவே இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கவர்னர் கிரண்பெடி புதுச்சேரி வந்ததில் இருந்து வகுப்புவாத அரசியல் செய்து வருகிறார். அதன் தொடக்கமாக மாநில அரசின் பரிந்துரையின்றி 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர்.

நியமன எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்துக்காக மக்கள் நலத்திட்டங்களை அங்கீகரிக்க மறுக்கிறார். நிதியை சுயவிளம்பரத்துக்காக பயன்படுத்துகிறார். அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் என யாராக இருந்தாலும் அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடுதான் செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு செல்லும்போது ஒப்பந்ததாரர்களை மட்டும் கவர்னர் அழைத்து பேசுகிறார். இதன் காரணமாக பல கார்பரேட் நிறுவனங்கள் தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள். சமூக பொறுப்புணர்வு நிதி முறையாக வசூலிக்கப்படுகிறதா? அந்த நிதி முறையாக கையாளப்படுகிறதா? என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.

கவர்னர் மாளிகையினால் சமூக பொறுப்புணர்வு நிதி கையாளப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விசாரிக்க வேண்டும். அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 26–ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆன செலவு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விவரம் கேட்டிருந்தோம். ஆனால் போட்டோ எடுத்த வகைக்கான செலவு மட்டுமே தரப்பட்டுள்ளது. ஆனால் மற்ற செலவுகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை என்று பதில் தந்துள்ளனர்.

அதேநேரத்தில் பிரபல சாமியார்களை அழைத்துவந்து விழாக்கள் நடத்தினார்கள். அதில் பெருமளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. எனவே கவர்னர் மாளிகையின் செலவுகள் தொடர்பாக பணியில் இருக்கும் நீதிபதி அல்லது சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்