‘குடும்பத்துடன் தீக்குளிப்பேன்’ விவசாயி மிரட்டல்

தனது நிலத்தின் பாசன கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என்று விவசாயி கலெக்டரிடம் முறையிட்டார்.

Update: 2018-10-22 23:30 GMT

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்குள் நாள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்டத்தின் பல பகுதியை சேர்ந்தோர் மனு கொடுத்தனர்.

வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். நேற்று தனது மகள்களுடன் மண் எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த மாரிச்சாமி அங்கிருந்தவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மண் எண்ணெய் கேனை வெளியே வைத்து விட்டு கலெக்டரிடம் சென்று முறையிட்டதாவது:–

வத்திராயிருப்பு கோட்டையூரில் எனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு கண்மாயில் இருந்து தண்ணீர் கொண்டு வர 8 அடி பாசன கால்வாய் உள்ளது. இந்த பாசன கால்வாய் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நெல் சாகுபடி செய்துள்ள எனது நிலத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. இது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்ட போது அவர் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு கொடுக்கும்படி கூறினார். பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனது நிலத்திற்கான பாசன கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் அடுத்த வாரம் எனது 4 மகள்களுடன் தீக்குளிப்பதை தவிர வேறு வழியில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன கால்வாய் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் முறையிட்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

விருதுநகர் அருகே உள்ள மேல் ஆமத்தூர் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய குழுவினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்த வீரலட்சுமி (வயது 23) என்பவர் தனது கணவர் மாரிமுத்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்றதாகவும், அங்கு சென்ற ஒரு வாரத்திற்குள் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதால் அவரை உடனடியாக தூதரக அதிகாரிகள் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துஉதவிடு மாறு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

சேத மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத்ராஜா கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கிராமப்புறங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிளை நூலகங்கள் திறக்கப்படாத நிலையில் உள்ளதால் அந்த நூலகங்களை கிராமப்புற இளைஞர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தலித் விடுதலை இயக்க மாநில மாணவர் அணி செயலாளர் பீமாராவ் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், இனாம் ரெட்டியபட்டி அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றொரு பிரிவினரால் தாக்கப்பட்டதாகவும், பாதிப்பு அடைந்த மாணவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி உதவி தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்