புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி சாலை மறியல்

ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-22 23:00 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ராமலிங்காபுரத்தில் இருந்து முதுகுடி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அருகே, புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு அருகே பள்ளிக்கூடங்கள், கோவில் உள்ளிட்டவை இருப்பதால் மாணவர்கள், பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தாசில்தார், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். அப்போது கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி கடையை மாற்றவில்லை. மேலும் ஊருக்குள் அனுமதியின்றி மதுபாட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும், அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் முதுகுடி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் போலீசார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடையை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்