மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: மின்னல் தாக்கி வீடு சேதம்; பெண் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடியில் மின்னல் தாக்கி வீடு சேதம் அடைந்தது. பெண் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் வெயில் அடித்தது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் மாவட்டத்தில் சில இடங்களில் கன மழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. காயல்பட்டினம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 62 மில்லி மீட்டர் மழை பதிவானது.
தூத்துக்குடியில் நேற்று அதிகாலை வரை இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகாலை 5 மணி அளவில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள சேர்மபாண்டி என்பவரின் வீட்டில் மின்னல் தாக்கியது.
இதில் சேர்மபாண்டியின் மனைவி தேவிகா (வயது 32) படுகாயம் அடைந்தார். வீட்டில் இருந்த சேர்மபாண்டி, அவரின் மகள்கள் கீர்த்தனா (11), பிருந்தா (7) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் வீட்டில் உள்ள பிரிட்ஜ், மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. வீட்டின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டது. மேலும் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டு இருந்த ஆஸ்பட்டாஸ் ஷீட் சேதம் அடைந்தது.
மின்னல் தாக்கி படுகாயம் அடைந்த தேவிகா, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
திருச்செந்தூர் -57, குலசேகரன்பட்டினம் -12, காயல்பட்டினம்-62, சூரங்குடி-13, கோவில்பட்டி -1, கயத்தாறு-8, கடம்பூர்-2, கழுகுமலை-7, ஓட்டப்பிடாரம் -2, வேடநத்தம் -3, கீழஅரசடி-0.1, சாத்தான்குளம்-45, ஸ்ரீவைகுண்டம் -28, தூத்துக்குடி-0.5.