சிறை கைதிகளுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடமாடும் பரிசோதனை வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூரில் உள்ள சிறை கைதிகளுக்கு காசநோய் கண்டறியும் முகாம் 2 நாட்கள் நடக்கிறது. இதற்கான நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.;

Update: 2018-10-22 22:45 GMT
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் சார்பில் 2 வாகனங்கள் மூலம் நடமாடும் காசநோய் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் நேற்று வேலூருக்கு வந்தது. இந்த நடமாடும் காசநோய் பரிசோதனை மையம் சார்பில் வேலூரில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை கைதிகளுக்கும் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கும் காசநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதற்கான நடமாடும் வாகனத்தை நேற்று கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் சுரேஷ், தேவபார்த்தசாரதி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

கலெக்டர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு காசநோய் பரிசோதனை செய்யும் முகாம் நேற்று தொடங்கியது. இன்றும் முகாம் நடக்கிறது.

பின்னர் கிளைச்சிறைகளில் உள்ளவர்களுக்கும், ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. வருகிற 27-ந் தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. மருத்துவமனைகளுக்கு சென்று காசநோய் பரிசோதனை செய்தால் அதன் முடிவு அடுத்த நாள்தான் தெரியும். ஆனால் இந்த முகாமில் அதிநவீன கருவிகள் மூலம் 2 மணிநேரத்தில் காசநோய் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்