அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு கடைகள் வைக்க அனுமதிக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு கடைகள் வைக்க அனுமதிக்கக் கோரி வியாபாரிகள் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்களை நம்பி கோவில் ராஜகோபுரம் முன்பு பலர் தற்காலிக கடைகளை அமைத்து பூஜை பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளை கோவில்களில் கடை வைத்திருக்க கூடாது, அவ்வாறு வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் பகுதிகளில் 120 கடைகள் அகற்றப்பட்டன. மேலும் அவர்களிடம் தினசரி வரி வசூலித்ததையும் கோவில் நிர்வாகம் கைவிட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ராஜகோபுரம் எதிரில் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும். கடைகளை முறைப்படுத்த வேண்டும். தினசரி வரி நிர்ணயம் செய்து வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலை தினசரி வாடகைதாரர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) சார்பில் வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை கோவில் இணை ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கோவில் முன்பு வியாபாரிகள் திரண்டு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாரி தலைமை தாங்கினார். செங்கான், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். தண்டபாணி, வீரபத்திரன் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் அனைவரும் கோவில் இணை ஆணையர் ஞானசேகரனை சந்தித்து 120 மனுக்கள் அளித்தனர்.