மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல் செங்கம் அருகே பரபரப்பு
செங்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.
செங்கம் அருகே கண்ணக்குருக்கையை அடுத்த மேல்நாச்சிப்பட்டு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கணித ஆசிரியராக திருவண்ணாமலை தாமரை நகரை சேர்ந்த கண்ணன் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கடந்த மாதம் சரியாக படிக்கவில்லை என்று கூறி அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி, தன்னை ஆசிரியர் கண்ணன் அடித்ததாகவும், பாலியல் தொல்லை செய்வதாகவும் பெற்றோரிடம் கூறினார்.
மாணவியின் பெற்றோர் கடந்த 8-ந்தேதி பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அப்போது தலைமை ஆசிரியர், கண்ணனை தற்போதைக்கு வேறு வகுப்பிற்கு மாற்றுவதாகவும், பின்னர் அவரை இப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து ஆசிரியர் கண்ணனை வேறு வகுப்பிற்கு மாற்றக்கூடாது என்று அவரது வகுப்பு மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்க பள்ளிக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் உறவினர்கள், பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் வந்தனர். அவர்கள் அனைவரும் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளிக்குள் புகுந்து வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த கண்ணனை சரமாரியாக அடித்து உதைத்தனர். வகுப்பில் இருந்து இருக்கைகளை கொண்டும் அவரை தாக்கினர். இந்த சம்பவம் வகுப்பில் இருந்த மாணவ- மாணவிகளின் முன்னிலையிலேயே அரங்கேறியது. தங்கள் ஆசிரியர் தாக்கப்படுவதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கண்ணனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பாய்ச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று ஆசிரியரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து செங்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.