விருதுநகரில் கொட்டித்தீர்த்த மழை: பணிமனையில் தண்ணீர் தேங்கியதால் அரசு பஸ்கள் முடக்கம்

விருதுநகரில் நேற்று முன்தினம் இரவு மழை கொட்டித்தீர்த்ததால் போக்குவரத்துக்கழக பணிமனையில் தண்ணீர் தேங்கிய நிலையில் நேற்று காலையில் பஸ்களை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டு முடங்கின.

Update: 2018-10-21 22:15 GMT
விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்தமழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- விருதுநகர் 119, ஸ்ரீவில்லிபுத்தூர் 48, வத்திராயிருப்பு 43.2, ராஜபாளையம் 42, சாத்தூர் 24, அருப்புக்கோட்டை 23, வெம்பக்கோட்டை 20.4, சிவகாசி 17, பிளவக்கல் 14.8.

விருதுநகரில் மதுரை ரோட்டில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை காரணமாக மழைநீர் தேங்கியதால் பஸ்களை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக அதிகாலை 4 மணி முதல் டவுன் பஸ்கள் இயக்கப்படும். ஆனால் நேற்று காலை 7½ மணி முதலே பஸ்கள் பணிமனையை விட்டு புறப்பட தொடங்கின. இதனால் கிராமங்களுக்கு செல்லவேண்டிய பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனைதொடர்ந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு பணிமனையில் தேங்கி நின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்குள்ள டீசல் டேங்கில் மழைநீர் செல்லாததால் இருப்பு இருந்த 21 ஆயிரம் லிட்டர் டீசலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

விருதுநகரில் மதுரை ரோட்டில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின் போது ரோட்டின் இருபுறமும் இருந்த மழைநீர் வடிகால் மூடப்பட்டதால் மழைநீர் செல்ல வழியில்லை. இதனால் மதுரை ரோட்டினை ஒட்டியுள்ள லட்சுமிநகர், பெத்தனாட்சி நகர், டி.கே.எஸ்.பி. நகர், வேல்சாமிநகர், கணேஷ் நகர். ஏ.எஸ்.ஏ.நகர். என்.ஜி.ஓ. காலனி ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்ததால் நேற்று காலை மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதே போன்று பேராலி ரோட்டிலுள்ள ஊருணி நிறைந்து அதனை ஒட்டியுள்ள கருப்பசாமி நகர், பாரதிநகர், ரெயில்வே காலனி, முத்தால் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது. ஊருணி தண்ணீர் பெருக்கெடுத்து தெருவில் ஓடிய நிலையில் சிலர் அதில் மீன் பிடித்தனர்.

மதுரை ரோட்டில் என்.ஜி.ஓ. காலனியை ஒட்டியுள்ள அரசு விருந்தினர் மாளிகை முன்பக்க சுவரும் அதனை ஒட்டியுள்ள வணிக வரித்துறை அலுவலக வளாக முன்பக்க சுவரும் இடிந்து விழுந்தன. போக்குவரத்து கழக பணிமனையை ஒட்டியுள்ள கணேஷ் நகருக்கு செல்லும் சாலை மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது. மொத்தத்தில் விருதுநகரின் வடக்குப்பகுதியில் நான்குவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டப்பணியின் போது மூடப்பட்ட மழைநீர் வடிகாலை மீண்டும் சீரமைக்க தவறியதால் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த மழை காரணமாக நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இனாம்ரெட்டியபட்டி பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்குள்ள நாயக்கர் மேலத்தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களிலேயே தேங்கியுள்ளது. மேலும் மின்மோட்டார்களை இயக்கும் கருவிகள் மின்னல் தாக்கி சேதமடைந்தது. 30 தெருவிளக்குகளும் சேதமடைந்துள்ளன.

மேலும் செய்திகள்