துமகூரு அருகே பரிதாபம் தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் சாவு
துமகூரு அருகே தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது.
துமகூரு மாவட்டம் துருவகெரே அருகே மணிசென்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 18). இவர், கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவர், தனது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த டிரைவரான மஞ்சுநாத்(20), ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளியான வேதமூர்த்தி என்ற வேதா(23) மற்றும் சிலருடன் துருவகெரேயில் உள்ள தடுப்பணைக்கு நேற்று காலையில் குளிப்பதற்காக சென்றனர். தடுப்பணையில் கிடந்த தண்ணீரில் இறங்கி நவீன் உள்ளிட்டோர் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் நீச்சல் தெரியாமல் நவீன், மஞ்சுநாத், வேதமூர்த்தி தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், நவீன் உள்பட 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் நவீன், மஞ்சுநாத், தேவமூர்த்தி ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்கள். இதுபற்றி உடனடியாக துருவகெரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்களுடன், துருவகெரே போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரில் மூழ்கி பலியான 3 பேரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு வேதமூர்த்தி, மஞ்சுநாத்தின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் இரவு வரை தேடியும் மாணவர் நவீனின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேதமூர்த்தி, மஞ்சுநாத்தின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து துருவகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தடுப்பணையில் மூழ்கி மாணவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் துமகூருவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.