மருந்து கடை உரிமையாளர் வீட்டில் தீ விபத்து; 4 பேர் உயிர் தப்பினர்

மாதவரம் அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2018-10-21 22:00 GMT

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரம் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 1–வது பிரதான சாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர், தனது வீட்டின் அருகே மருந்துக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டில் மனைவி மோகனபிரியா (28), மகள் வேதவர்ஷினி (11), மகன் ஞானவர்‌ஷன் (2) ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென ஞானவர்‌ஷன் அழுதான்.

மோகனபிரியா எழுந்து மகனுக்கு பசியாற்றினார். அப்போது படுக்கை அறைக்குள் திடீரென புகை வந்தது. இதை பார்த்த மோகனபிரியா தனது கணவரை எழுப்பி அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஜெயக்குமார் எழுந்து அந்த அறையின் கதவை திறந்து பார்த்தபோது தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுபற்றி ஜெயக்குமார் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும், மணலி தீயணைப்பு நிலைய போலீசார் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மற்றும் துணிகள் முற்றிலும் நாசமாயின.

இந்த தீ விபத்து குறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்