கும்மிடிப்பூண்டி பஜாரில் பொதுமக்களின் எதிர்ப்பால் மதுக்கடைக்கு சீல் வைப்பு

கும்மிடிப்பூண்டி பஜாரில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் மதுக்கடைக்கு சீல் வைத்தனர்.

Update: 2018-10-21 22:30 GMT

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் மார்க்கெட், அரசு பள்ளி, சினிமா தியேட்டர் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்றவற்றின் அருகில் கடந்த 1–ந்தேதி மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையறிந்த பொதுமக்கள் மதுக்கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், மதுக்கடை மூடப்படுவதாக தெரிவித்தார். இதனை ஏற்று அன்றைய தினம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் பொதுமக்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அடிக்கடி திறக்கப்பட்ட மேற்கண்ட மதுக்கடையின் முன்பு இதுவரை கடந்த 1–ந் தேதியை தவிர 3–ந்தேதி, 17–ந்தேதி என பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்த பின்பும் தொடர்ந்து மதுக்கடை திறக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த 19–ந்தேதி மீண்டும் அந்த மதுக்கடை திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மதுக்கடை திறப்பதற்கு முன்பாகவே பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேற்கண்ட மதுக்கடையை மூடக்கோரி நேற்று சமூக ஆர்வலரும், வக்கீலுமான வேலு தலைமையில் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டங்களுக்கு செவி சாய்க்காமல் கடையை மீண்டும், மீண்டும் திறப்பதை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் மதுக்கடையின் பெயர் பலகையை கழற்றி வீசினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மீண்டும் தெரிவித்தனர்.

இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கவில்லை. தாசில்தார் அல்லது வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். இப்படி அடிக்கடி போராட்டம் நடத்திட எங்களால் முடியாது. எனவே கடையை மூடி சீல் வைத்தால் தான், நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என அவர்கள் உறுதியாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் உத்தரவின்பேரில் பொதுமக்கள் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் வருவாய்த்துறையினர் மேற்கண்ட மதுக்கடைக்கு சீல் வைத்தனர். இதனால் நிம்மதி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்