கல்பாக்கம் அருகே மரத்தில் கார் மோதி சாப்ட்வேர் என்ஜினீயர் பலி
கல்பாக்கம் அருகே மரத்தில் கார் மோதி சாப்ட்வேர் என்ஜினீயர் பலியானார்.
கல்பாக்கம்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் ஹரீஷ் (வயது 29). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் குரோம்பேட்டையை சேர்ந்த பிரவீன் (29). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மதியம் காரில் புதுச்சேரி நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். ஹரீஷ் காரை ஓட்டினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை இவர்களது கார் முந்தி செல்ல முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் பிரவீன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.