தர்மபுரி அருகே பரபரப்பு அடுத்தடுத்து 4 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
தர்மபுரி அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் ஐதராபாத்துக்கு தேங்காய் எண்ணெய் பாக்கெட் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பப்பிரெட்டியூரை சேர்ந்த சங்கரன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார். மாற்று டிரைவராக கம்மம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (28) என்பவர் உடன் வந்தார்.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் சேலம் - தர்மபுரி சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியின் என்ஜினில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் திடீரென என்ஜினில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரன், விஜயகுமார் உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
அந்த நேரம் லாரியில் தீ மளமளவென எரிந்தது. மேலும் லாரி பின்னோக்கி நகர்ந்து வந்தது. அப்போது கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரை திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த ரமேஷ் (32) என்பவர் ஓட்டி வந்தார். அதில் 6 பேர் இருந்தனர். பின்னோக்கி நகர்ந்து வந்த லாரி ரமேஷ் சென்ற கார் மீது மோதியது. இதில் அந்த காரும் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் வந்த ரமேஷ் உள்ளிட்ட 7 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர்.
அதே போல பின்னால் வந்து கொண்டிருந்த பெங்களூருவை சேர்ந்த நாராயணசாமி என்பவருடைய காரும், நாமக்கல்லில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கியாஸ் டேங்கர் லாரியும் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரி, கார் மீது மோதின. இதில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், கியாஸ் டேங்கர் லாரியிலும் தீப்பிடித்தது. இதையடுத்து அந்த காரில் வந்த நாராயணசாமியும், கியாஸ் டேங்கர் லாரி டிரைவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விஜயகுமாரும் தப்பி ஓடி விட்டனர்.
நடுரோட்டில் 2 லாரிகளும், 2 கார்களும் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்ததை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வாகனங்களை தொலைவிலேயே நிறுத்தி விட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆனால் கியாஸ் டேங்கர் லாரியும் தீப்பிடித்து எரிந்ததால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற அச்சத்தில் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்லவில்லை. அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகளும் அச்சத்தில் அங்கிருந்து வெகு தொலைவிற்கு சென்று விட்டனர். ஆனால் அதில் கியாஸ் நிரப்பப்படாத காலி டேங்கர் லாரி என அந்த லாரி டிரைவர் விஜயகுமார் தெரிவித்தார். அதன்பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்தே தீயணைப்பு வீரர்கள் அருகில் சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னரே தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் அந்த லாரிகள், கார்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்து எலும்புகூடு போல மாறின. தொப்பூர் போலீசார் விரைந்து சென்று அந்த லாரிகள், கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து லாரிகள்-கார்கள் என 4 வாகனங்கள் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.