இருவேறு விபத்து: பெண் உள்பட 2 பேர் பலி
வாடிப்பட்டி பகுதியில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள்.
வாடிப்பட்டி,
மதுரை அன்புநகர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நாச்சியம்மாள்(வயது 58). இவருடைய மகன் கண்ணன்பாபு(32). இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கண்ணன்பாபு தனது தாயார் நாச்சியம்மாளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதியில் வந்தபோது, தனிச்சியம் பிரிவில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கண்ணன்பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் நாச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். கண்ணன்பாபு லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
இதேபோன்று வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையை சேர்ந்தவர் கணேசன்(வயது 58). இவர் சாணாம்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கணேசன் தனது மொபட்டில் ஆண்டிபட்டி நோக்கி சென்றார். கட்டக்குளம் பிரிவில் அவர் திரும்பியபோது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான மதுரையை சேர்ந்த ராஜபாண்டி(50)என்பவரை கைதுசெய்தார்.