சீர்மரபினருக்கு டி.என்.டி. சான்றிதழ் வழங்க நடவடிக்கை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சீர்மரபினருக்கு டி.என்.டி. சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2018-10-20 23:00 GMT
உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் நிறுவனர் பி.கே.மூக்கையாத்தேவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மூக்கையாத்தேவர் சிலையை திறந்து வைத்தார். அதன்பிறகு கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் அவர் திறந்துவைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-

முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் புலித்தேவன், வேலூநாச்சியார், மருது சகோதரர்கள் வழியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தீவிர தொண்டனாக ஒரே தொகுதியில் பலமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றும், 2 முறை எம்.பியாக இருந்தும், எம்.ஜி.ஆரால் பாராட்டு பெற்ற மூக்கையாத்தேவர் சிலையை திறந்துவைப்பதில் பெருமைப்படுகிறேன். இன்னும் ஒருவாரத்தில் சீர்மரபினர் கோரிக்கை வைத்துள்ள டி.என்.டி. சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.50 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை வைப்பு தொகையாக வைத்து அதில் கிடைக்கக்கூடிய வட்டிப்பணத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் படிப்பிற்காக செலவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம், கல்வி அறக்கட்டளை, தபால்தலை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., எஸ்.டி.ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி. பார்த்தீபன், எம்.எல்.ஏ.க்கள் நீதிபதி, சரவணன், பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்தானம், தவசி, கதிரவன், முத்துராமலிங்கம், பாண்டியம்மாள், பாரதிய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் முருகன்ஜி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலைராஜா, கல்லூரி தாளாளர் வாலாந்தூர்பாண்டி, கல்லூரி முதல்வர் ஜோதிராஜன், சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் அல்லிக்கொடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் 58 கிராம பாசன கால்வாய் விவசாயிகள் சங்கத்தினர் துணை முதல்-அமைச்சரிடம், 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் கல்லூரியின் ஆங்கில துறை பேராசிரியரும், சமூக ஆர்வலருமான தமிழ்செல்வி, தமிழகத்தின் பெண்களின் வாழ்க்கை மதுவினால் சீரழிந்து கொண்டிருக்கிறது, எனவே மதுக்கடைகளை மூடி, பூரண மதுவிலக்கு ஏற்படுத்த வலியுறுத்தி மனு கொடுத்தார்.

இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் மகேந்திரன், சேடபட்டி ஒன்றிய செயலாளர் துரை தனராஜன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சேதுராமன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் மார்க்கெட் பிச்சை, நாட்டாமங்கலம் வக்கீல் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்