கார்–மோட்டார் சைக்கிள் மோதல்; 3 வயது குழந்தை பலி தாய் உள்பட 3 பேர் படுகாயம்

கார்–மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 வயது குழந்தை பலியானது. தாய் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-10-20 22:30 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள மேலவாளாடியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30), கூலித்தொழிலாளி. இவரது மனைவி லலிதா (26). இவர்களுக்கு கனிஷ்கா (5), ஹர்‌ஷதா (3) என்ற மகள்கள் உள்ளனர். நேற்று காலையில் லலிதா 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு தம்பி சக்திவேலுடன் (22) மோட்டார் சைக்கிளில் கூத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

 மோட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்டினார். மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் பகுதியில் ஹர்‌ஷதாவும், பின்புறம் லலிதா மற்றும் கனிஷ்காவும் அமர்ந்திருந்தனர். சென்னை – திருச்சி தேசியநெடுஞ்சாலையில் மாருதிநகர் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் வந்தபோது, செங்கல்பட்டிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்த கார் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.


இதனால் மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி தேசியநெடுஞ்சாலையின் இரண்டு சாலைகளுக்கு இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதியதுடன் அதனை கடந்து திருச்சி – சென்னை சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஹர்‌ஷதா இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் செங்கல்பட்டு அருகே உள்ள மேலமெய்யூர் 2–வது தெருவை சேர்ந்த மைக்கேல் மகன் சிவசங்கரை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்